ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹ…

ஹட்டன், கொட்டகலை நகரில் மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்ட 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்புத் தொகையை, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, வியாழக்கிழமை (09) குறித்த மஞ்சள் பருப்புத் தொகையை ஹட்டன் மாவட்ட நீதவான் மற்றும் மேலதிக நீதவான் பீட்டர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர், அவற்றை அழிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மஞ்சள் பருப்புத் தொகையின் உரிமையாளர், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, அவருக்கு 2,000 ரூபாய் அபராதம் விதித்து நீதவான் உத்தரவிட்டார்.

நீதவானின் உத்தரவிற்கமைய, தலைவக்கலை, லிந்துலை நகர சபையின் கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட குறித்த மஞ்சள் பருப்புத் தொகை, பொதுச் சுகாதார பரிசோதகர்களால் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.கைப்பற்றப்பட்ட இந்த மஞ்சள் பருப்புத் தொகையின் சந்தைப் பெறுமதி சுமார் 5,22,000 ரூபாய் ஆகும்.

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்களால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொட்டகலை நகரில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போது, களஞ்சியசாலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டெடுக்கப்பட்டன. தொடர்ந்து அவற்றைச் சுவீகரித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுமக்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதற்காக, இவ்வாறான காலாவதியான அல்லது தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், கைப்பற்றப்படும் பொருட்கள் பொது வெளியில் அழிக்கப்பட்டு வருகின்றன. வர்த்தகர்கள் தமது விற்பனை நிலையங்களில் தரமான பொருட்களை மட்டுமே இருப்பில் வைக்குமாறு சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருகின்றனர்.