அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது…

அமெரிக்கா - ஈரான் மீண்டும் இராணுவத் தாக்குதல்களை அறிவித்ததைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிசக்தி விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(13.07.2026) எண்ணெய் விலைகள் 4% க்கும் மேல் உயர்வடைந்துள்ளது.

பிரென்ட் கச்சா எண்ணெய் எதிர்கால ஒப்பந்தங்கள் 0325 GMT நிலவரப்படி, 3.10 டொலர் (4.08%) உயர்ந்து, 79.11 ஆக டொலராக காணப்பட்ட நிலையில், அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 2.95 டொலர் (4.11%) உயர்ந்து 74.36 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் நேற்று(12) ஈரானுக்கு எதிரான மற்றொரு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் இன்று(13) அறிவித்துள்ளனர்.

ட்ரம்ப்பின் அறிவிப்பை தொடர்ந்து ஈரான் அதிரடி

இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வணிகப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று கூறியிருந்தார்.

இருப்பினும், அங்கீகரிக்கப்படாத பாதையில் பயணித்த ஒரு கப்பல் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் முன்னதாகவே அறிவித்திருந்தது.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் போர் தொடங்குவதற்கு முன்பு, உலகின் எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% இந்த நீரிணை வழியாகவே கொண்டு செல்லப்பட்டது.

இதன்படி, நேற்று ஆறு கப்பல்கள் இந்த ஹோர்முஸ் நீரிணையைக் கடந்தன என்று Kpler நிறுவனத்தின் கப்பல் கண்காணிப்புத் தரவுகள் காட்டியுள்ளன. இது கடந்த ஐந்து வாரங்களில் பதிவான மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.

எரிபொருள் விலை அதிகரிப்பு மேலும் 60 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நீரிணை மீண்டும் திறந்து போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் கையெழுத்திடப்பட்ட அமெரிக்க-ஈரானிய இடைக்கால ஒப்பந்தத்தின் எதிர்காலம் குறித்து, அதிகரித்து வரும் இந்தத் தாக்குதல்கள் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளன.

ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஜூன் மாதத்தில் உலகளாவிய எண்ணெய் விநியோகம் ஒரு நாளைக்கு 4.1 மில்லியன் பீப்பாய்கள் அதிகரித்தது, ஆனால் அது போருக்கு முந்தைய அளவை விட ஒரு நாளைக்கு 9.4 மில்லியன் பீப்பாய்கள் குறைவாகவே இருந்தது என்று சர்வதேச எரிசக்தி முகமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

வார இறுதியில் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சமீபத்திய சிறு மோதல்களுக்கு ஒப்பீட்டளவில் விரைவான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைகள் கேள்விக் குறியாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

எண்ணெய் விலைகளில் ஏற்பட்ட ஒப்பீட்டளவில் மிதமான உயர்வு, தற்போதைய மோதல்கள் ஒரு பலவீனமான போர்நிறுத்தத்திற்குள் ஏற்பட்ட ஒரு பதற்ற அதிகரிப்பைக் குறிக்கிறது என்றும், போர்நிறுத்தம் முழுமையாகச் சரிவடைவதற்கு வெகு தொலைவில் உள்ளது என்றும் சந்தை கருதுவதைக் காட்டுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.