ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித…

ஹோர்முஸ் நீரிணையில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சொந்தமான இரண்டு எண்ணெய் போக்குவரத்து கப்பல்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதலில் இந்திய ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களில் நால்வரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எட்டு பேரில் அறுவர் இந்தியப் பிரஜைகளும், இருவர் உக்ரைன் பிரஜைகளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘மொம்பாசா’ (Mombasa) மற்றும் ‘அல் பஹியா’ (Al Bahia) ஆகிய எண்ணெய் கப்பல்கள், ஓமான் கடல் எல்லைக்கு அண்மையிலுள்ள ஹோர்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. உயிரிழந்த இந்திய ஊழியர் ‘மொம்பாசா’ கப்பலில் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலால் இரு கப்பல்களிலும் தீப்பரவல் ஏற்பட்டதுடன், குறிப்பிடத்தக்க அளவில் சேதமும் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இது “வெட்கக்கேடான தாக்குதல்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தகுந்த பதிலடி வழங்கும் முழுமையான உரிமை தமக்கு இருப்பதாகவும், தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நாடு வலியுறுத்தியுள்ளது.