ஓமான் கடற்பரப்பில் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் திங்கட்கிழமை(06) இரவு எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்…
ஓமான் கடற்பரப்பில் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் திங்கட்கிழமை(06) இரவு எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.இயற்கை எரிவாயுபிரித்தானிய கடல்சார் வர்த்தக அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமானின் லீமா கடற்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்று அடையாளம் தெரியாத ஏவுகணையால் தாக்கப்பட்டு தீப்பற்றியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி வெளியான தகவல்களின்படி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் (IRGC) வணிகக் கப்பல்கள் மீது குறைந்தது இரண்டு ஏவுகணைகளை ஏவியுள்ளனர்.
இதில் கத்தாரின் 'அல் ரெகய்யாத்' என்ற திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பலும், சவூதி அரேபியாவின் கொடியுடன் சென்ற மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பலும் பலத்த சேதமடைந்துள்ளன. எனினும், கப்பல் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு ஈரான் உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.அத்துடன், எச்சரிக்கைகளை மீறிச் சென்றதால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்
அதேவேளையில், ஈரானிய குழுக்கள் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் இந்தக் கப்பல்கள் நுழைந்ததால் தற்காப்புக்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பிராந்திய அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கடந்த பெப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலங்கள் ஈரானில் நடைபெற்று வரும் நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.கடந்த ஜூன் 14 அன்று அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிகப் போர் நிறுத்த உடன்படிக்கை (MoU) கையெழுத்தானது.
இதன் மூலம் 60 நாட்களுக்குப் போர் நிறுத்தப்பட்டு, நிரந்தர அமைதிக்கான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் கத்தாரில் நடைபெற்று வருகின்றன. இந்த உடன்படிக்கையின்படி ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் கப்பல்களும் சுதந்திரமாகச் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த நீரிணையின் இறையாண்மையைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் கப்பல்களுக்குக் கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வருவதை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது.உடன்படிக்கை விதிமீறல் உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ள இந்த குறுகிய கடல் வழியை ஈரான் தனது பேச்சுவார்த்தை பலத்திற்காகப் பயன்படுத்தி வருகிறது.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் ஈரானுடன் உடன்படிக்கை செய்துகொள்வோம் அல்லது இந்த யுத்தத்தை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவருவோம்.
ஈரானின் 91 மில்லியன் மக்களைப் பாதிக்க நான் விரும்பவில்லை.
ஆனால், அவர்கள் உடன்படிக்கைக்கு வராவிட்டால், ஒரே மணிநேரத்தில் அவர்களின் பாலங்களையும் ஆற்றல் விநியோகக் கட்டமைப்புகளையும் எம்மால் தகர்க்க முடியும்" என்று எச்சரித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, இத்தகைய அச்சுறுத்தல்கள் தற்காலிக உடன்படிக்கையின் விதிகளை மீறுவதாகவும், அமெரிக்கா தனது கையெழுத்துக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் இறுதி உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

