அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியு…
அமெரிக்கா மற்றும் ஈரான் படைகளுக்கு இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் முறிந்ததை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.இன்று திங்கட்கிழமை தொடர்ச்சியாக ஒன்பதாவது நாளாக ஈரானிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்கப் படைகள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன.கப்பல்கள் வெடித்துச்சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவிப்பு இதற்கிடையே, உலகின் மிக முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் வெடித்துச் சிதறி செயலிழந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளதால் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் முக்கிய நகரங்களான தப்ரிஸ், சாபஹார், கொனாரக், பந்தர் மார்ஷஹர் மற்றும் பந்தர் இமாம் கொமேனி ஆகிய பகுதிகளில் அதிகாலையில் அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வணிகக் கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதல் திறனை அழிப்பதற்காகவே இந்த புதிய அலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் வழித்தடங்களை ஈரான் கட்டுப்படுத்த நினைக்கும் வரை அமெரிக்காவின் இந்த பதிலடி தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த மோதல்களின் எதிரொலியாக பஹ்ரைன் நாட்டில் வான்வழித்தாக்குதலுக்கான அபாய சங்குகள் ஒலிக்கப்பட்டன.
மேலும், ஈரான் அனுப்பிய அச்சுறுத்தல் தரும் ட்ரோன்களை தங்கள் நாட்டு இராணுவம் இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் அறிவித்துள்ளது. அமெரிக்க தளங்கள் மீதான ஈரான் ஏவுகணை வீச்சு அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அகாபா விமான நிலையம், குவைத்தில் உள்ள அல்-அதிரி முகாம், அலி அல் சலிம் விமான தளம் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை குறிவைத்து தங்களது புரட்சிகர காவல் படை பயங்கர பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதாக ஈரான் தெரிவித்துள்ளது. மேலும், குவைத்தில் உள்ள முக்கிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் அங்கு கடுமையான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க இராணுவத்தின் வழிகாட்டுதலின் படி ஆபத்தான தெற்கு கடல் வழித்தடத்தைப் பயன்படுத்த முயன்ற இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு கப்பல்கள் வெடித்துச்சிதறி, நகர முடியாமல் கடலிலேயே முடங்கியுள்ளதாக ஈரானியப்படை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு தொடரும் வரை இந்த ஹோர்முஸ் நீரிணை வழித்தடத்தில் ஒரு சொட்டு எண்ணெய் அல்லது எரிவாயு கூட பாதுகாப்பாகச் செல்ல முடியாது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்த பதற்றமான சூழலால் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.
இதனால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 2 சதவீதம் உயர்ந்து, ஒரு பேரல் 90 டொலருக்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.
உயரும் அமெரிக்க வீரர்களின் பலி எண்ணிக்கை ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில், வீழ்த்தப்பட்ட ஈரானிய ட்ரோன் ஒன்றைச் செயலிழக்க வைக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் அமெரிக்க வீரர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
இதன்மூலம் இந்த போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 420 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை முடக்குவதற்காக அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தொடங்கிய இந்த போரில், ஈரான் மற்றும் லெபனானில் இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

