ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்ட…

ஈரானின் தெற்குப் பகுதிகளில் அமைந்துள்ள ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் உள்ளிட்ட நகரங்களை இலக்காகக் கொண்டு அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், கடல்சார் தாக்குதல்களைத் தடுக்கும் நோக்கிலும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், ஈரானிய இராணுவத்தின் தாக்குதல் திறனைக் குறைக்கும் வகையில் பாதுகாப்புப் படைத் தளபதியின் உத்தரவின் பேரில் இந்த இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது, ஜாஸ்க், பந்தர் அப்பாஸ் மற்றும் சிரிக் பகுதிகளில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா அண்மையில் ஈரானின் பல இராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன்கள், போர் விமானங்கள் மற்றும் கடற்படை கப்பல்களின் உதவியுடன் துல்லியத் தாக்குதல்களை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தாக்குதல்களில் ஈடுபட்ட தரப்பினரை அமெரிக்கப் படைகள் முறியடித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மறுபுறம், ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்கள் தாம் அறிவுறுத்திய கடல் வழித்தடங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் அவற்றின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த சம்பவங்களைத் தொடர்ந்து அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளதுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பாதுகாப்பு நிலைமை குறித்த சர்வதேச கவலைகளும் அதிகரித்துள்ளன.