ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப் போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது. "எதிரிகளின் கூட்டாளியான முகமது அமினி தெஹாகானி என்ற நபரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறு…

ஈரானில் கடந்த குளிர்காலத்தில் அரசுக்கு எதிராக வெடித்த தீவிரப் போராட்டங்களில் பங்கேற்ற நபருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

"எதிரிகளின் கூட்டாளியான முகமது அமினி தெஹாகானி என்ற நபரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததைத் தொடர்ந்து, இன்று(15) காலை அவர் தூக்கிலிடப்பட்டார்" என்று நீதித்துறையின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர் மீது "மொஹாரேபே" (இறைவனுக்கு எதிரான போர்) மற்றும் "பூமியில் ஊழல்/அழிவை ஏற்படுத்துதல்" ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி கடந்த ஜனவரி 9ஆம் திகதி, தெஹாகான் பகுதியில் உள்ள ஆளுநர் அலுவலகத்தின் வெளிப்பகுதியில் முகமது அமினி பெட்ரோல் குண்டு வீசியதாகவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் நகர பொலிஸ் நிலையத்தை எரியூட்டி அழித்ததாகவும் அரசு ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஈரானில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டங்கள், பின்னர் அரசியல் கோரிக்கைகளாக உருவெடுத்து நாடு முழுவதும் அதிவேகமாகப் பரவின.

இப்போராட்டங்களை ஒடுக்க அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.

எனினும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெற்ற கலவரங்களே இவை என்று ஈரானிய அதிகாரிகள் சித்தரிப்பதோடு, வன்முறையில் சுமார் 3,000 பேர் மட்டுமே இறந்ததாகக் கூறுகின்றனர்.

ஆனால், பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறி, வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இந்த இறப்பு எண்ணிக்கை இதைவிடப் பல மடங்கு அதிகம் என்று குற்றம் சாட்டுகின்றன.