இலங்கையின் அறுவை சிகிச்சை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மருத்துவக் குழுவொன்று மேற்கொண்டுள்ளது. இந்த விசேடமான இரண்டு அறுவை சிகிச்சைகளும் அண்மையி…

இலங்கையின் அறுவை சிகிச்சை துறையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் முதன்முறையாக இரண்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சைகளை மருத்துவக் குழுவொன்று மேற்கொண்டுள்ளது.

இந்த விசேடமான இரண்டு அறுவை சிகிச்சைகளும் அண்மையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது இலங்கையின் சுகாதார சேவையை ஒரு புதிய தொழில்நுட்ப யுகத்திற்கு இட்டுச் செல்லும் முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

இங்கு மருத்துவ நிபுணர்கள் இருவர் ரோபோ தொழில்நுட்பத்தின் உதவியைப் பெற்று இந்த அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டனர்.

அவற்றில் ஒன்று சுமார் 50 வயதுடைய பெண் ஒருவரின் கருப்பையை அகற்றும் அறுவை சிகிச்சையாகும். மற்றைய அறுவை சிகிச்சை சிறுநீரகம் சார்ந்த ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Robotic Surgery

இந்த தொழில்நுட்பத்தின் கீழ், அறுவை சிகிச்சையானது ரோபோவினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்படுவதில்லை மாறாக, அறுவை சிகிச்சை வைத்தியரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழேயே மேற்கொள்ளப்படுகிறது.

வைத்தியர் ஒரு விசேட கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி ரோபோ கைகளைக் கட்டுப்படுத்துவதுடன், ரோபோ அமைப்பானது அந்த அசைவுகளை மிகத் துல்லியமாக நோயாளியின் உடலினுள் செயல்படுத்துகிறது.

செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நவீன நிரலாக்க (Programming) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால், மனிதக் கைகளால் செய்ய கடினமாக இருக்கும் மிக நுண்ணிய அசைவுகளைக் கூட துல்லியமாகச் செய்யும் ஆற்றல் இந்த அமைப்பிற்கு உள்ளது.

இலங்கை சுகாதாரத் துறைக்கு ஒரு புதிய படி,

AI மற்றும் ரோபோ தொழில்நுட்பத்தின் இணைவோடு இலங்கையின் அறுவை சிகிச்சை துறையை ஒரு புதிய தளத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்பது இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சைகள் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மேலும் பல வைத்தியசாலைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிந்தால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து, இலங்கையை இப்பிராந்தியத்தின் ஒரு நவீன அறுவை சிகிச்சை சேவை மையமாக மாற்றுவதற்கான வாய்ப்பும் உருவாகும்.