இலங்கையில் வருடத்திற்கு வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக விசேட நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பு சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (13) நட…

இலங்கையில் வருடத்திற்கு வருடம் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாக தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக விசேட நிபுணர் வைத்தியர் சத்யா ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளின் தரவுகளை ஆய்வு செய்யும்போது புதிய தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதைக் காண முடிகிறது.போதைப்பொருள் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே கூடுதலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன், பெண்களை விட ஆண்களிடையேயே இந்தத் தொற்றின் வீதம் மிக அதிகமாகக் காணப்படுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவு நடத்தைகள் மற்றும் போதைப்பொருள் செலுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஊசிகள் போன்ற உபகரணங்களைப் பகிர்ந்துகொள்வதே இதற்கான முக்கிய காரணங்கள்.

எச்.ஐ.வி வைரஸால் ஒருமுறை பாதிக்கப்பட்டால் அதனை 100 சதவீதம் முழுமையாகக் குணப்படுத்த முடியாது, குறிப்பாக இளம் வயதிலேயே இத்தொற்றுக்குள்ளாகுபவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் முறையான மருந்துகளையும், நீண்டகால மருத்துவ சிகிச்சைகளையும் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறான பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் ஹெபடைடிஸ் போன்ற தொற்றுகளைக் கண்டறிந்து, அவற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை மையமாகக் கொண்டு விசேட நடமாடும் வைத்தியசாலைத் திட்டமொன்று இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு முன்னோடி நிகழ்வாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்களின் தனியுரிமை மற்றும் விருப்பங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடமாடும் சேவைகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் அங்கு நிகழ்த்தப்படும் பரிசோதனை அறிக்கைகளின் இரகசியத்தன்மை 100 சதவீதம் பாதுகாக்கப்படும். மேலும், இந்த நடமாடும் வைத்திய முகாம்களின் மூலம் ஏதேனும் தொற்று கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான வைத்திய ஆலோசனைகளையும், முறையான சிகிச்சைகளையும் இலவசமாக வழங்குவதற்குச் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் தேசிய பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது என்றார்.