​இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் த…

​இலங்கை குற்றவியல் சரித்திரத்தில் இன்றும் ஒரு அதிர்ச்சிகரமான கருப்பு அத்தியாயம் பதிவாகியிருக்கின்றது. யாரும் எதிர்பாராத வகையில் இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராக (IGP) பணியாற்றிய சிடி. விக்ரமரத்ன அவரது வீட்டில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று சில முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

​பொதுவாகவே இலங்கையில் தற்கொலைகள் என்பது புதிய விடயமல்ல. அதிலும் குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும்போது ஏற்படும் கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இத்தனை ஆண்டுகள் மிக உயரிய பதவியிலிருந்தபோது வராத மன அழுத்தம் ஓய்வுபெற்ற பிறகு இவருக்கு ஏன் வந்தது என்று யோசிக்கும்போதுதான் இதன் பின்னணியில் இருக்கும் பலத்த சந்தேகங்கள் எழுகின்றன.

நிழல் அரசு பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கும் இலங்கையில் தொடர்ந்து நடைபெறும் நீதிமன்ற மற்றும் பொலிஸ் விசாரணைகளை உற்றுநோக்குபவர்களுக்கும் இந்த மரணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது எளிதில் புரியும்.

​ராஜபக்ச குடும்பத்திற்கும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் மிகவும் விசுவாசமான ஒரு அதிகாரியாகவே செயல்பட்டவர் இந்த சிடி.விக்ரமரத்ன.

2019 ஆம் ஆண்டு கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு இவரது பெயரை அவரே பரிந்துரை செய்து நியமித்தார். அதுமட்டுமன்றி இவரது பதவிக்காலத்தில் கோத்தாபயவால் நான்கு முறைக்கும் மேலாக இவருக்குப் பதவி நீடிப்பு வழங்கப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் அரசுக்கு எதிராக எழுந்த மக்கள் போராட்டங்களை அடக்கவும் ராஜபக்சக்களின் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடியவர்களை அடித்துத் துன்புறுத்தவுமே இந்த நீடிப்புகள் வழங்கப்பட்டதாக ஜே.வி.பி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

​ஈஸ்டர் தாக்குதல் குறித்து மிகத் தீவிரமாக விசாரித்த CID பணிப்பாளர் ஷானி அபயசேகர விக்ரமரத்னவின் பரிந்துரையின் பேரிலேயே பதவி இறக்கம் செய்யப்பட்டு பின்னாளில் கைதும் செய்யப்பட்டார். மேலும் ஈஸ்டர் பயங்கரம் குறித்து விசாரித்த 20 க்கும் மேற்பட்ட திறமையான CID அதிகாரிகள் விசாரணைப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டதுடன் 700 க்கும் அதிகமான பொலிஸ் மற்றும் CID அதிகாரிகளுக்குப் பயணத்தடையும் விதிக்கப்பட்டது.

ஸாரா ஜெஸ்மினின் சர்ச்சைக்குரிய மூன்றாவது டீ என் ஏ பரிசோதனையின் ரிப்போர்ட்டை எடுக்க சுரேஷ் சலேயுடன் அரச பகுப்பாய்வுத் திணைக்களத்திற்குச் சென்றவர் இவர்.

இதற்கு மேல் தகவல் தேவை இல்லை. வரைபடத்தைக் கீறிக் கொள்ளுங்கள்.

​கடந்த மே மாதமளவில் ராஜபக்சக்களின் ஊழல் சாம்ராஜ்யத்தின் முக்கிய புள்ளியாகவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊழல் வழக்கில் பிரதான குற்றவாளியாகவும் பார்க்கப்பட்ட கபில சந்திரசேனவும் இதேபோன்று மர்மமான முறையில் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் மரணமடைந்திருந்தார். ​அன்று கபில சந்திரசேன இன்று சிடி. விக்ரமரத்ன என தொடரும் இந்த வரிசை பலத்த சந்தேகங்களை விதைக்கிறது.

ஈஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணை மற்றும் ராஜபக்சாக்களின் பெருமளவிலான நிதி ஊழல் விசாரணைகள் தற்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையிலும் சுரேஷ் சலே போன்றவர்களின் இறுதி விசாரணைகள் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் இவர்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு தற்கொலையாக சித்திரிக்கப்படுகிறார்களா? அல்லது மிரட்டி தற்கொலை செய்யத் தூண்டப்படுகிறார்களா என்ற சந்தேகம் வலுவாகவே எழுகின்றது.

​ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற பாரிய பயங்கரவாதச் சம்பவங்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளையும் ஊழல்வாதிகளையும் கூண்டில் ஏற்றுவதாக உறுதியளித்து தீர்க்கமாக செயல்படும் இந்த அரசு சாட்சிகள் விடயத்தில் காட்டும் மெத்தனம் ஆபத்தானது.

​அரசாங்கம் இந்த விஷயத்தில் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால் உண்மையான குற்றவாளிகளை ஒருபோதும் சட்டத்தின் முன் நிறுத்த முடியாது. சாட்சிகள் ஒவ்வொன்றாக மறைந்துபோனால் “ஈஸ்டர் குற்றவாளிகளுக்கும் ஊழல்வாதிகளுக்கும் தண்டனை வழங்குவோம்” என்ற தேர்தல் மேடை வாக்குறுதிகள் வெறும் காற்றோடு கரைந்துபோன வெற்று வார்த்தைகளாகவே மாறிவிடும்.