சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள களஞ்சியசாலைகள் ஊடாக இந்த கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. தற்…

சிறுபோக பருவத்தில் அறுவடையாகும் நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கை இன்று (13) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.

நெல் அறுவடை அதிகளவில் இடம்பெறும் பகுதிகளுக்கு அண்மையிலுள்ள களஞ்சியசாலைகள் ஊடாக இந்த கொள்வனவு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது வடக்கு, கிழக்கு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருவதால், முதற்கட்டமாக அந்தப் பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது.

அரசாங்கம் நிர்ணயித்த விலைக்கு ஏற்ப, ஒரு கிலோ நாட்டு நெல் 120 ரூபாவிற்கும், சம்பா நெல் 130 ரூபாவிற்கும், கீரி சம்பா நெல் 140 ரூபாவிற்கும் கொள்வனவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் சேமிப்பிற்காக இதுவரை 143 களஞ்சியசாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதுடன், அவை முழுமையாக நிரம்பும் சந்தர்ப்பத்தில் அருகிலுள்ள தனியார் களஞ்சியசாலைகளையும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் 6,000 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கியுள்ளதுடன், மேலதிகமாக 10,000 மில்லியன் ரூபாய் கடன் வசதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல் கையிருப்புகளை சேகரிக்க தேவையான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், இந்த முழு நடவடிக்கையும் கமநல சேவை திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.