இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்து' கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதற்காக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள…

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் இன்று(21) விவசாயிகளின் 'மகாபஞ்சாயத்து' கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.

இதற்காக பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தலைநகர் நோக்கிப் புறப்பட்டனர்.பெரும் போராட்டம் தேஷ் பச்சாவ் மோட்சா அமைப்பின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்தப் பேரணியைத் தடுக்க, பஞ்சாப் - அரியானா எல்லையான ஷம்பு பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்தினர்.

இரும்பு தடுப்புகள், பேரிக்கேட்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு, டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஷம்பு எல்லையிலேயே அமர்ந்து போராட்டத்தைத் தொடங்கினர்.

கடந்த ஆண்டு இதே எல்லைப் பகுதியில் நடைபெற்ற நீண்டகால விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றிருந்த நிலையில், மீண்டும் அதே இடம் போராட்டக் களமாக மாறியுள்ளது. இதற்கிடையில், அரியானாவின் அம்பாலா, குருக்ஷேத்ரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த விவசாயிகள் தொடர்ந்து டெல்லி நோக்கிப் பயணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மறுபுறம், டெல்லியில் நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டமும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

நேற்று நாடாளுமன்றம் நோக்கிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பொலிஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகைகுண்டுகளைப் பயன்படுத்தி கலைத்தனர்.

இந்த மோதலில் 118 பொலிஸாரும், 70 போராட்டக்காரர்களும் காயமடைந்ததாகவும், பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.அனுமதி மறுப்பு

இன்றும் பேரணி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவது முன்கூட்டியே தடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விவசாயிகள் ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும், இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டால் சோயாபீன், சோளம், பருத்தி, ஆப்பிள், பாதாம் மற்றும் பால் பொருட்கள் போன்றவை இந்திய சந்தையில் அதிகளவில் நுழையும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதன் விளைவாக, இந்தியச் சிறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும், கிராமப்புற பொருளாதாரம் சீர்குலையும் அபாயம் இருப்பதாகவும் விவசாய அமைப்புகள் எச்சரிக்கின்றன.

மேலும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் மத்திய அரசு பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என்றும், விவசாயிகள், தொழிலாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களுடன் விரிவான ஆலோசனை நடத்தாமல் எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடக் கூடாது என்பதே தங்களது முக்கிய கோரிக்கை என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.