இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவாக, யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா சென்று, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்…
இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களுக்கு ஆதரவாக, யுரேனியம் வழங்க அவுஸ்திரேலியா உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தனது அரசுமுறைப் பயணத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலியா சென்று, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இந்தச் சந்திப்பின் போது அணுசக்தி ஒத்துழைப்பு, கடல் பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
மேலும், இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ககன்யான்’ விண்வெளித் திட்டத்தில் அவுஸ்திரேலியா இணைந்து செயற்படுவதற்கும், கோகோஸ் தீவுகளில் தற்காலிக விண்வெளி கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் துடிப்பான ஜனநாயக நாடுகளாகவும் கடல்சார் வல்லரசுகளாகவும் இருப்பதால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் வலுப்பெறும் என தெரிவித்தார்.
அதேவேளை, அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தியா–அவுஸ்திரேலியா உறவு முன்னெப்போதையும் விட தற்போது மிகவும் வலுவாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

