இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார். கடந்த ஜூலை 10ஆம் திகதி…

இராகலை சென். லியோனார்ட்ஸ் தோட்டத்தில் நீதிமன்ற உத்தரவின் பேரில் குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்ட 6 குடும்பங்களின் நிலைமை குறித்து ஆராய்வதற்காகக் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சம்பவ இடத்திற்கு நேரில் விஜயம் செய்தார்.

கடந்த ஜூலை 10ஆம் திகதி நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், நீண்டகாலமாக வாழ்ந்து வந்த வீடுகளிலிருந்து இந்த மலையகக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தற்காலிக முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.தவறான விமர்சனங்கள்பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்து பிரதியமைச்சர் இதன்போது கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்,

"இந்த வெளியேற்ற நடவடிக்கையானது கடந்த காலங்களில் தொடரப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பாகவே அமைந்திருந்தது. எனினும், இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை எனப் பலர் தவறான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அது முற்றிலும் பிழையானதொரு கண்ணோட்டமாகும்." எனத் தெளிவுபடுத்தினார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாகக் காணி சீர்திருத்த ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, இதற்கான உண்மையான பின்னணி என்னவென்பதை முழுமையாக ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போது தற்காலிக தீர்வு வழங்கப்பட்டிருந்தாலும், உரிய சட்ட மற்றும் நிர்வாக நகர்வுகளின் பின்னர் அவர்களுக்கு மிக விரைவாக நிரந்தரமான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன், அமைச்சர் லால்காந்த அவர்களுடனும் இவ்விடயம் குறித்துக் கலந்துரையாடிச் சரியானதொரு தீர்வை எட்டவுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய குடியிருப்புகளை வழங்குவதற்குத் தற்போதைய அரசாங்கம் நிச்சயமாக முன்னின்று செயற்படும் என்றும் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இதன்போது மேலும் தெரிவித்தார்.

இந்தக் கள விஜயத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச அமைப்பாளர், அரச அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.