முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டமானது, இன்றைய தினம்(14.07.2026) 21ஆவது நாளாக இரண்டாம் கட…
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கேப்பாப்பிலவில், இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்றைய தினம்(14.07.2026) 21ஆவது நாளாக இரண்டாம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மக்களின் கோரிக்கை இதன்போது, கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் நேரில் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.
தமது பூர்வீக நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்த கேப்பாப்பிலவு மக்கள், பல ஆண்டுகளாக அமைதியான ஜனநாயக வழியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தங்களது சொந்த நிலங்களில் மீளக் குடியேறவும், விவசாயம் உள்ளிட்ட வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் முடியாத நிலை காரணமாக அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
21 ஆவது நாளாக தொடரும் போராட்டம் கேப்பாப்புலவு பூர்வீகக் காணிகள் தொடர்பான நீண்டகால பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரமான தீர்வு எட்டப்படாத நிலையில், தங்களது உரிமைகளை மீண்டும் வலியுறுத்தும் நோக்கில் மக்கள் இரண்டாவது கட்ட போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்த போராட்டம் இன்று(14) 21ஆவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில், கேப்பாப்பிலவில் 55 குடும்பங்களுக்கு சொந்தமான 59.5 ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகள் நீண்டகாலமாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள குறித்த காணிகளை உடனடியாக மக்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கேப்பாபிலவு மக்களினுடைய பூர்வீக காணிகள் விடுவிக்கப்படும் வரை அவர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வரை வடகிழக்கு மாகாணங்களில் இருக்கும் சிவில் அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் வாதிகள் தொடர்ச்சியாக தமது ஆதரவினை வழங்க வேண்டும் என்றும் கிழக்கு மாகாண காணி மீட்புக்கான வலையமைப்பு அணியினர் வலியுறுத்தியுள்ளனர்.

