ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒ…
ஊடகவியலாளர் லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோதமான துன்புறுத்தல்கள் தொடர்பாக உடனடியாக தலையிடுமாறு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
அச்சங்கம் ஜனாதிபதிக்கு விடுத்திருக்கும் கோரிக்கையில் தெரிவித்துள்ளதாவது, தினசரி ஆங்கில பத்திரிகையின் இணையத்தள ஆசிரியரான லஹிரு தொலொஸ்வல ஜூலை 15 ஆம் திகதி தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் காரில் தனது இல்லம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, இராணுவத் தளபதியின் பாதுகாப்பு வாகனத் தொடரணியைச் சேர்ந்த லேண்ட் குரூஸர் வாகனம் ஒன்று அவர்களின் வாகனத்துடன் மோதியுள்ளது. அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்அந்த சந்தர்ப்பத்தில் அவர் சம்பவத்தை காணொளி பதிவு செய்ய முயன்றபோது கொமாண்டோ அதிகாரி ஒருவர் அவரைப் அச்சுறுத்தி காணொளி பதிவை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் அச்சந்தர்ப்பத்தில் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய முற்றபட்டபோது அங்கு சுமார் 30 இராணுவ அதிகாரிகள் வருகை தந்து அவர் முறைப்பாடு செய்வதைத் தடுத்துள்ளனர். வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலும் தொலொஸ்வல பயமுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளார். இறுதியில் வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்ட போதிலும் அழுத்தங்கள் காரணமாக அது மாற்றப்பட்டுள்ளதாகவும் அவரது தொலைபேசியில் இருந்த காணொளி சாட்சியங்கள் பலவந்தமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரை நடைபெற்ற இந்த பயங்கர அனுபவம் காரணமாக லஹிரு தொலஸ்வல மற்றும் அவரது குடும்பத்தினர் இன்னும் மன உளைச்சலில் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முப்படைகளின் தளபதி என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோருவது யாதெனில் சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக முறையான விசாரணையை ஆரம்பித்து கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் மேலும் ஊடக சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கத்திற்கு அறிவிக்குமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

