நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றமையை கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15.07.2026) நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடு…

நாட்டில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைந்து வருவதுடன், உயிரிழப்புகளும் பதிவாகி வருகின்றமையை கருத்திற்கொண்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வொலிவோரியன் பகுதியில் இன்று (15.07.2026) நுளம்பு களத்தடுப்பு மற்றும் வீட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் நேரடித் தலைமையில், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து இந்தத் தீவிர கூட்டுத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.டெங்கு ஒழிப்பு

இன்றைய கள நடவடிக்கையின் போது, வொலிவோரியன் பகுதியிலுள்ள வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வெற்று நிலங்கள் அனைத்தும் அதிகாரிகளினால் அணு அணுவாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளன.இதன்போது, டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கியிருந்த இடங்கள் மற்றும் டெங்கு பரவலுக்கு வழிவகுக்கும் அபாயகரமான சூழல்கள் பல அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்ட நுளம்புப் பெருக்க இடங்கள் அனைத்தும் வீட்டு உரிமையாளர்களின் முழுமையான ஒத்துழைப்புடன் உடனடியாக அகற்றப்பட்டு, சுற்றுப்புறச் சூழல் துப்புரவு செய்யப்பட்டுள்ளது.விழிப்புணர்வு எதிர்காலத்தில் இவ்வாறான டெங்கு அபாய நிலைமைகள் மீண்டும் ஏற்படாதவாறு பொதுமக்களுக்கு டெங்கு தடுப்பு மற்றும் சுற்றுப்புறத்தைப் பேணுவது தொடர்பான அத்தியாவசிய விழிப்புணர்வு அறிவுறுத்தல்களும் இதன்போது அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளன.டெங்கு அற்ற ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கு பொதுமக்கள் அனைவரும் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து செயற்பட வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்களையாவது ஒதுக்கி, தங்கள் வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் நீர் தேங்காதவாறு சுத்தமாக வைத்திருக்குமாறு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொதுமக்களை மிக அவசரமாகக் கேட்டுக்கொண்டுள்ளது.