இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளுடனான வர்த்தகத்திற்குத் தடை அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இறக்குமதி உரிம முறை, அதிகப்படியான வரிகள் அல்லது முழுமையான தடை விதிப…

இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றப் பகுதிகளுடனான வர்த்தகத்திற்குத் தடை அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) வெளியுறவு அமைச்சர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

இறக்குமதி உரிம முறை, அதிகப்படியான வரிகள் அல்லது முழுமையான தடை விதிப்பது உள்ளிட்ட பலதரப்பட்ட விடயங்கள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை ஐரோப்பிய ஆணையம் இந்த கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.

மேற்குக்கரையில் நிலவும் சூழல் மிகவும் சகித்துக்கொள்ள முடியாததாக உள்ளதாகவும், இது இரு நாட்டுத் தீர்வுக்கான சாத்தியங்களை முடக்குவதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு கொள்கை தலைவர் காயா காலாஸ் கவலை தெரிவித்துள்ளார்.வர்த்தகத் தடை இந்த வர்த்தகத் தடையை நடைமுறைப்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து 27 நாடுகளின் ஒருமித்த ஆதரவு தேவையா அல்லது தகுதிவாய்ந்த பெரும்பான்மை போதுமா என்பதில் உறுதியான முடிவு எட்டப்படவில்லை.

ஸ்பெயின், அயர்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கோரி வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் இன்னும் இது குறித்து இறுதி முடிவு எடுக்காமல் தயக்கம் காட்டி வருகின்றன.

கடந்த 1967 ஆம் ஆண்டு முதல் மேற்குக்கரையை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேல், சர்வதேச சட்டங்களின்படி அது சட்டவிரோதம் என்ற சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பையும் மீறி அங்கு 5 இலட்சத்திற்கும் அதிகமான யூத குடியேற்றங்களை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.