தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி நாட்டில் இல்லாதிருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமானதொரு நிலைக்குத் தள்ளப்படுவது உறுதியாகியிருக்கும் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, தனது அட…
தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் ஆட்சி நாட்டில் இல்லாதிருந்தால், இலங்கை இதைவிட மிகவும் பாரதூரமானதொரு நிலைக்குத் தள்ளப்படுவது உறுதியாகியிருக்கும் என்று போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மிராக்கல் டோம் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்வொன்றின் போது, தனது அடியார்களை விளித்து உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயற்பாடுகளை கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்ட போதகர், ஜனாதிபதி மிகவும் நேர்மையான முறையில் தனது கடமைகளை நிறைவேற்றி வருவதாகக் கூறினார். "உங்கள் ஜனாதிபதி மிக நேர்த்தியாக, நேர்கோட்டில் பந்தை எதிர்கொள்கிறார் (நேரடியாகச் செயலாற்றுகிறார்). அவரது பாணி உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் மிகவும் நேரடியான ஒரு நபர்" என புகழ்ந்து பாராட்டியுள்ளார்.அரசியல் நிலவரங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிக்காமல் இருக்க வேண்டுமாயின், அரசியல்வாதிகளுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும் என அவர் இங்கு வலியுறுத்தியுள்ளார்.உலக அரசியலில் நிலவும் மோதல் சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், சாதாரண மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியுமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான மோதல்களை உதாரணத்திற்குக் காட்டி, இவ்வாறான அரசியல் நெருக்கடிகளுக்குள் சிக்காமல் சாதாரண மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்புகள் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தலையீடு இல்லாதிருந்தால், நாட்டின் நிலைமை இதைவிடப் பல மடங்கு மோசமடைந்திருக்கக்கூடும் என்பதைத் தன்னால் உறுதியாகக் கூற முடியும் என போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார். போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த காலங்களில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

