நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தை இவ்வருட இறுதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுக…

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தின் தாக்கம் உள்ளிட்ட நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் பிரான்ஸிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவிருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது விஜயத்தை இவ்வருட இறுதி வரை ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வருடத்தின் பிற்பகுதியில் புதிய திகதியொன்றை வழங்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். விஜயத்திற்கான அழைப்பு மற்றும் பின்னணி கடந்த பெப்ரவரி மாதம் புதுடில்லியில் நடைபெற்ற ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தாக்கங்கள் குறித்த உச்சிமாநாட்டின்’ (AI Impact Summit) போது, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோர் சந்தித்த போதே இந்த பிரான்ஸ் விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.GSP+ வரிச்சலுகை வசதியை நீடிப்பதற்காக பிரான்ஸின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலே திட்டமிடப்பட்டிருந்தது. தற்போதைய சலுகை டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதால், இலங்கை அடுத்த ஆண்டில் GSP+ வரிச்சலுகைகளுக்காக புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.

GSP+ வசதியானது தகுதிபெறும் வளரும் நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குள் பிரவேசிப்பதற்கு முன்னுரிமை வழங்குகிறது. எனினும், அதன் தொடர்ச்சியானது மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 27 சர்வதேச உடன்படிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பொருளாதாரம் மற்றும் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் பிரான்ஸுடன் கையெழுத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

"விஜயத்திற்கு முன்னர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் உள்ளடக்கங்களை இறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியுடன் செல்லும் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் நிதியமைச்சின் பிரதி அமைச்சர் ஆகியோர் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.