‘டித்வா’ (Ditwah) சூறாவளியின் தாக்கத்தைத் தணிப்பதற்கு முன்கூட்டியே அறிவிப்புகள் இருந்தும், ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட தோல்விகளைக் கண்டித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு, எதிர்வரும் அக்டோபர் 30 ஆ…

‘டித்வா’ (Ditwah) சூறாவளியின் தாக்கத்தைத் தணிப்பதற்கு முன்கூட்டியே அறிவிப்புகள் இருந்தும், ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் தொடர்புடைய அரச அதிகாரிகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளில் ஏற்பட்ட தோல்விகளைக் கண்டித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு, எதிர்வரும் அக்டோபர் 30 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, நீதியரசர்கள் ஜனக் டி சில்வா மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, 2025 நவம்பர் 13 முதல் இலங்கையின் வானிலை முன்னறிவிப்புகளைக் கொண்ட பிபிசி (BBC) ஆவணப்படம் மற்றும் ஸ்லைடுஷோ (Slideshow) ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

மனுதாரர் சில தகவல்களை வெளிப்படுத்துமாறு கோரியிருந்த நிலையில், அதற்குப் பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, தரப்பில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை என்று குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மனுதாரருக்கு எதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை இரண்டு மாதங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தேவைப்படின், மனுதாரர் அதற்குப் பதிலளிக்கும் வகையில் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்-ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் தொழில்புரியும் சட்டத்தரணி கீர்த்தி பண்டார கிரிதெனவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், ஜனாதிபதி, அமைச்சரவை, தேசிய அனர்த்த முகாமைத்துவ சபை உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, 2025 நவம்பர் 12 ஆம் திகதியே வளிமண்டலவியல் திணைக்களம் சூறாவளி குறித்த எச்சரிக்கைகளை விடுத்திருந்த போதிலும், கொத்மலை போன்ற முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து நீரை முன்கூட்டியே வெளியேற்றுதல் உள்ளிட்ட எவ்வித ஆக்கபூர்வமான தணிப்பு நடவடிக்கைகளையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என மனுதாரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால், கம்பளை போன்ற பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தையும், அதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் சொத்துச் சேதங்களையும் பெருமளவு தவிர்த்திருக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சூறாவளி காரணமாக, கண்டியில் உள்ள தனது சட்டத்தரணிகள் அலுவலகம் முழுமையாகச் சேதமடைந்ததாகவும், தனது தொழில் கடமைகளுக்குத் தேவையான விலைமதிப்பற்ற கணினித் தரவுத்தளங்களை இழந்ததாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

அனர்த்தத் தயார்நிலை மற்றும் முகாமைத்துவ விடயத்தில் பிரதிவாதிகளின் இவ்வாறான செயற்பாடுகள் மற்றும் கடமை தவறிய விதம், அவர்களின் சட்டரீதியான மற்றும் அரசியலமைப்பு கடமைகளை மீறுவதாக அமைகிறது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரியவுடன் சட்டத்தரணிகள் நிசல் பெர்னாண்டோ, கல்பனி திஸாநாயக்க மற்றும் ஹேஷானி பொன்சேகா ஆகியோர் முன்னிலையாகினர்.