தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஆளுமைத் திறன் குறித்து பொதுமக்கள் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்…

தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் ஆளுமைத் திறன் குறித்து பொதுமக்கள் அதிக திருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமை குறித்து மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

சமூகக் காட்டி அலகு நடத்திய அண்மைய ஆய்வில், அரசாங்கம் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்தும் விதம் குறித்து மக்களிடையே கலவையான கருத்துக்கள் காணப்படுகின்றன.

இதன்படி, 45.3% பேர் இது குறித்து திருப்தி தெரிவித்துள்ள அதேவேளை, 44.0% பேர் தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, நகர்ப்புறங்களில் வாழும் மக்களிடையே வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவது குறித்த திருப்தி குறைவாகவே (34.8%) காணப்படுகிறது. பொருளாதாரக் நெருக்கடிகள் நிலவியபோதிலும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் செயல்பாடுகள் குறித்து 75.5% என்ற மிக உயர்ந்த அளவிலான மக்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஒப்பீட்டளவில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மீது 29.4% மக்களே திருப்தி கொண்டுள்ளனர்.

மேலும், தேசிய மக்கள் சக்தி திறம்பட ஆட்சி நடத்தும் திறன் கொண்டது என 62.8% பேர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 64.1% பேர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். எனினும், அதனை உடனடியாக செய்யப்பட வேண்டிய முன்னுரிமைப் பணியாக 23.6% பேர் மட்டுமே கருதுகின்றனர். பெரும்பாலானோர் (40.5%) அது ஒழிக்கப்பட வேண்டும் என்றாலும், இத்தருணத்தில் அது அவசர முன்னுரிமை அல்ல என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.

'தித்வா' பேரிடர் நிவாரணச் சேவைகளின் போது அரசாங்கம் செயல்பட்ட விதம் குறித்து 68.6% மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு 51.6% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாகாண சபை தேர்தலை நடத்துவது முக்கியமானது என 67% மக்கள் நம்புகின்றனர். தற்போதைய அரசியல் தலைமைத்துவம் மற்றும் நிறுவன மறுசீரமைப்புகள் குறித்து இலங்கை மக்கள் சாதகமான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் தெளிவுபடுத்துகின்றன.