ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்…

ஜனாதிபதியின் பிரான்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒத்திவைக்கப்பட்டமைக்கு அவருக்கு விசா மறுக்கப்பட்டதே காரணம் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.  பிரான்ஸ் விஜயம் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதியின் பிரான்ஸ் விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அரசாங்கத்தினால் ஜனாதிபதிக்கான விசா நிராகரிக்கப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் சில தரப்பினர் பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஊடகங்களில் பரவும் இத்தகைய தகவல்களை யார், என்ன நோக்கத்திற்காகப் பரப்புகிறார்கள் என்பதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பொதுமக்களைத் தவறான வழியில் திசைதிருப்பும் வகையிலான இத்தகைய போலியான தகவல்களை உருவாக்குபவர்கள் மற்றும் திட்டமிட்டு அவற்றைச் சமூக ஊடகங்களில் பரப்புபவர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே 'இணையவழி பாதுகாப்புச் சட்டம்' தற்போது வரைவு செய்யப்பட்டு வருகின்றது. சமூக ஊடகப் பயன்பாடு தொடர்பில் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு இத்தகைய போலியான செய்திகளே காரணமாக அமைகின்றன.

பிரான்ஸுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் இருதரப்பு இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைவாகவே இந்த விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கும் மிகவும் வசதியானதொரு திகதி மற்றும் காலப்பகுதி வரும் நாட்களில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். அத்துடன், இந்த விஜயம் தொடர்பாக எம்மாலோ அல்லது பிரான்ஸ் தூதராலயத்தினாலோ உத்தியோகபூர்வமாகத் திகதிகள் எதுவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருக்கவுமில்லை என்றார்.