ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர் எடுத்து புதிய சாதனை படைத்த பெண் மேயர் ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு மேயர் மகப்பேறு விடுப்பு எடுத்து புதிய சாதனை செய்துள்ளார். மேற்கு ஜப்பானில் உள்ள சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவதா நகரத்…
ஜப்பானில் மகப்பேறு விடுப்பு எடுத்த முதல் பெண் மேயர்
எடுத்து புதிய சாதனை படைத்த பெண் மேயர்
ஜப்பான் நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, பதவியில் இருக்கும் ஒரு மேயர் மகப்பேறு விடுப்பு எடுத்து புதிய சாதனை செய்துள்ளார்.
மேற்கு ஜப்பானில் உள்ள சுமார் 69,000 மக்கள் தொகை கொண்ட யவதா நகரத்தின் மேயரான ஷோகோ கவாடா எடுத்துள்ள இந்த முடிவு, நாடு முழுவதும் விவாதங்களை ஏற்படுத்தியதோடு சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டில், தனது 33ஆவது வயதில் ஜப்பானின் மிக இள வயது பெண் மேயராகப் பொறுப்பேற்ற போதே தமக்குக் குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இருந்ததாக கவாடா தெரிவித்துள்ளார். சட்டத்தில் இடமில்லை.. யவதா நகர சபை ஊழியர்களுக்கு 16 வாரங்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதி உள்ள போதிலும், மேயர் பதவிக்கு அத்தகைய விதிகள் எதுவும் ஜப்பானிய சட்டத்தில் இல்லை. இதனால், கவாடா தனக்கான புதிய நடைமுறை விதியை முறைப்படி உருவாக்க வேண்டியிருந்தது.
இது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,
"மகப்பேறு விடுப்பு எடுக்கும் முதல் மேயர் நான்தான் என்பதை அறிந்து நானே மிகவும் ஆச்சரியப்பட்டேன். இதன் மூலம், ஜப்பானில் இதுவரை இளம் பெண்களோ அல்லது பொதுவாகப் பெண்களோ மேயர் போன்ற உயர்பதவிகளுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வந்துள்ளனர் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது” என்றார்.
கடந்த ஆண்டு ஜப்பானின் முதல் பெண் பிரதமராக சனாயே தகைச்சி பொறுப்பேற்ற போதிலும், ஜப்பானிய அரசியலில் இன்னும் ஆண்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது.
பிரசவத்திற்கான விடுமுறை
உலகப் பொருளாதார மன்றத்தின் பாலின இடைவெளி அறிக்கையில், அரசியல் அதிகாரப் பகிர்வுப் பிரிவில் ஜப்பான் 125ஆவது இடத்தில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானில் பிறப்பு விகிதம் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இந்த அமைப்பில் பெரிய சீர்திருத்தங்கள் தேவை என்று கவாடா வலியுறுத்தியுள்ளார்.
பாலின சமத்துவம் மற்றும் வேலை நேரச் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசும் நாம், தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண்கள் உட்பட எந்தத் துறையில் இருப்பவர்களும் பயமின்றி குழந்தை பெற்றுக் கொள்ளும் சமூகச் சூழலை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு செய்யத் தவறினால் மக்கள் தொகை சரிவும் பொருளாதார வீழ்ச்சியும் தவிர்க்க முடியாததாகிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேயரின் முடிவிற்கு எதிர்ப்பு
வரும் செப்டெம்பர் மாதம் கவாடாவுக்குக் குழந்தை பிறக்கவுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் சக அதிகாரிகள் பெரும்பாலானோர் இவரது முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இணையத்தில் சிலர் இதற்கு எதிர்மறையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
அவர் தனது கடமையைச் செய்யாமல் விடுப்பு எடுப்பதற்காகவே பதவியில் இருக்கிறார் என்று சிலர் பதிவிட்டது தமக்கு ஏமாற்றமளிப்பதாக மேயர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, உள்ளூர் மக்கள் சிலர், ஒரு பெண் மேயர் மகப்பேறு விடுப்பு எடுப்பதை வரவேற்தாகவும், ஆனால் விடுப்புக் காலத்தில் அவருக்கு 100% முழுச் சம்பளம் வழங்கப்படுவதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.

