வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளைத் தற்போதைய நிலையில் விடுவிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விகள…

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முப்படைகளின் பயன்பாட்டில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த காணிகளைத் தற்போதைய நிலையில் விடுவிக்க முடியாது என்று பாதுகாப்புத் துறை பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார். யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பலாலி பகுதி அதி அவதானமிக்க பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதால், அந்த வலயத்திற்குள் அமைந்துள்ள 1,661 ஏக்கர் காணியைச் சட்டத்தின் பிரகாரம் இராணுவத்திற்கு உரித்தாக்கி, காணி உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காணிகளை விடுவிக்க முடியாது.

774.98 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள பலாலி விமான நிலையத்தின் எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்காக மேலதிக காணிகள் தேவைப்படுவதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்துள்ளது. இது குறித்த நடவடிக்கைகளை நில அளவைத் திணைக்களம், முப்படைகள் மற்றும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புடன் பொதுக் கொள்கை அடிப்படையில் முன்னெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

27.9 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையின் புனரமைப்புப் பணிகளுக்காக இதுவரை 55 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இந்த ஆண்டு இதற்காக 42.11 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தக் காணியையும் இராணுவப் பயன்பாட்டிலிருந்து விடுவிக்க முடியாது.

பொதுப் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு அவசியமற்ற காணிகள் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றன. 2009 முதல் 2024 வரையான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 64,663 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய அரசாங்கம் பதவியேற்றவுடன் 692 ஏக்கர் காணிகளை விடுவித்ததுடன், எதிர்வரும் சில மாதங்களில் மேலும் 243 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

"மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொண்டு, காணிகளை இயலுமான வகையில் விடுவிப்போம். விடுவிக்க முடியாத காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளோ அல்லது உரிய இழப்பீடோ வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

இராணுவத்தினர் தமது சுய தேவைக்காக மட்டுமே பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், வியாபார நோக்கில் எவ்வித பயிர்ச்செய்கைகளிலும் ஈடுபடுவதில்லை என்றும் அமைச்சர் இதன்போது தெளிவுபடுத்தினார்.