யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது வாரமாகவும் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் அமைந்துள்ள…
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது வாரமாகவும் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், தங்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர்.
1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை தங்களது சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் மீளக் குடியேற முடியாத நிலை நீடிப்பதாக தெரிவித்தனர்.
சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான காணிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், அந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பல ஆண்டுகளாக பல்வேறு வடிவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.
தங்களின் வாழ்வாதாரத்திற்கும் நிரந்தர குடியிருப்பிற்கும் அவசியமான காணிகளை விரைவாக மீள வழங்குமாறு காணி உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

