பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை நோக்கி மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இது தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அவரை பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவிலிர…

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை நோக்கி மிகக் கேவலமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ள யாழ். மாவட்ட சுயேச்சைக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இது தொடர்பான விசாரணைகள் முடிவடையும் வரை அவரை பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) சிறப்புரிமைப் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் கூறுகையில், “கடந்த மே 25ஆம் திகதி எனது உரையைத் தொடர்ந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உரையாற்றிவிட்டு, தனது ஆசனத்தில் அமர்ந்திருந்தவாறு என்னை நோக்கி மிக அசிங்கமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். இந்தச் சம்பவம் பாராளுமன்றத்தில் உள்ள கமராக்களில் பதிவாகியிருக்கும். ஏற்கனவே, குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் கட்சித் தொண்டர்கள் ஐவருக்கு எதிராக எனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் தொடர்பில் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் அடியாட்களால் எனக்குப் பலமுறை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இத்தகைய பின்னணியில், ஒழுக்கக்கோவையின் பிரகாரம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறான நபர் ஒருவர் பாராளுமன்ற ஒழுக்காற்றுக் குழுவில் இருப்பது அந்தக் குழுவையே கேலிக்கூத்தாக்கும் என்பதால், விசாரணை முடியும் வரை அவரை அக்குழுவிலிருந்து இடைநிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.