முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.இது தொடர்பில் வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பா…
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட மிளகாய்த்தூளில் கலப்படம் இருப்பது ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து வியாபாரி ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.இது தொடர்பில் வர்த்தகர்களினால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சுகாதார பரிசோதகர்களால் சந்தேகத்தின் பேரில் மிளகாய்த்தூள் மாதிரிகள் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகளில் மிளகாய்த்தூளில் கலப்படம் செய்யப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டது.விசாரணை இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த பொருட்கள் நீர்கொழும்பிலிருந்து மொத்த விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தமை தெரியவந்தது. மேலும் பொருட்களை விற்பனை செய்த மொத்த வியாபாரி உரிய அனுமதியின்றி கலப்பட உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததும் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பகுதியில் மொத்த விற்பனை மேற்கொண்ட வியாபாரிக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர் சுரேஸ் ஆனந்தன் உள்ளிட்ட குழாமினர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறித்த வியாபாரிக்கு 15,000 ரூபா அபராதமும் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதித்துள்ளது.கலப்பட உணவுப் பொருட்கள்இதேவேளை, வெளி மாவட்டங்களில் இருந்து கலப்பட உணவுப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் தொடர்ச்சியாக இவ்வாறான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளி மாவட்டங்களில் இருந்து உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவற்றின் தரத்தை உறுதிப்படுத்துவதுடன், தேவையான ஆவணங்கள், உற்பத்தி நிலையத்திற்கு உள்ளூராட்சி அமைப்பின் அனுமதி உள்ளிட்ட விடயங்களை சரிபார்த்து விழிப்புணர்வுடன் செயற்படுமாறும் சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

