சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனியில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கக் கூடாது எனக் கோரி பழைய மாணவர்கள் இன்று பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை நடைபெறவுள்ள நடைபவனிக்கு எம்.ஏ. சுமந்தி…
சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள நடைபவனியில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் பங்கேற்கக் கூடாது எனக் கோரி பழைய மாணவர்கள் இன்று பாடசாலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளை நடைபெறவுள்ள நடைபவனிக்கு எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நிலையில், பாடசாலையுடன் தொடர்புடைய முன்னாள் மாணவர் ஒருவருக்கே அந்த கௌரவம் வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
“விக்டோரியன்ஸே அதிதியாக வர வேண்டும்”, “பாடசாலை நிர்வாகம் தன்னிச்சையான முடிவுகளை எடுக்காதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய அவர்கள், விழா ஏற்பாடுகள் குறித்து பழைய மாணவர் சங்கம் மற்றும் விழாக்குழுவின் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டினர்.
தாங்கள் எந்தவொரு தனிநபருக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும், 150ஆம் ஆண்டு விழாவில் பழைய மாணவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

