சிறிலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் தொடர்பான அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்த…

சிறிலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில், சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் தொடர்பான அரசாங்கப் பகுப்பாய்வாளர் அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.இதற்கமைய, குறித்த அறிக்கையை விரைவாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கோரி அரசாங்கப் பகுப்பாய்வாளருக்கு விசேட நினைவூட்டல் கடிதம் அனுப்ப நீதவான் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டிலுள்ள அறையொன்றில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத போதைப்பொருட்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்த விடயங்களை கருத்தில் கொண்ட பின்னர், குறித்த அறிக்கைகளை விரைவாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கையும் இதுவரை கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, பிரேதப் பரிசோதனை அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறு கோரி கொழும்பு சட்ட மருத்துவ அதிகாரி அலுவலகத்திற்கு நினைவூட்டல் கடிதம் அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக குறித்த வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.