நீட் (NEET) தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் 'கரப்பான் பூச்சி ஜனதா' கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்ட…

நீட் (NEET) தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், கல்வி முறையில் சீர்திருத்தம் வேண்டியும் 'கரப்பான் பூச்சி ஜனதா' கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதையொட்டி, நாடாளுமன்றத்தை நோக்கி 'சலோ சன்சாத்' (நாடாளுமன்றத்தை நோக்கி) பேரணி நடத்த அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது.

அதன்படி, இன்று காலை முதலே அக்கட்சியினர் நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழையப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முயன்றபோது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை மீறி முற்றுகையிட முயன்ற கட்சியினர் மீது, போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். தற்போது அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தத் தொடர் போராட்டங்கள் மற்றும் தடியடிச் சம்பவங்கள் காரணமாக அப்பகுதியில் பதற்றம் நிலவுவதோடு, டெல்லியின் சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று காலை நடந்த இந்தத் தடியடிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.