மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் வெப்பம் மற்றும் பலமாக வீசும் "கச்சான்" காற்று (தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று) காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில், வெளியில் நடமாட…

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் வெப்பம் மற்றும் பலமாக வீசும் "கச்சான்" காற்று (தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்று) காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான காலப்பகுதியில், வெளியில் நடமாட முடியாத அளவிற்கு உஷ்ணம் அதிகரித்துக் காணப்படுகிறது.

பலமாக வீசும் இந்த அனல் காற்று, புழுதியை வாரி இறைப்பதாலும், வீடுகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தூசுகள் படிவதாலும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். தகரத்திலான கூரைகள், அடைப்புகள் மற்றும் கொட்டில்கள் பலத்த காற்றினால் சேதமடைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் காலநிலை காரணமாகத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கடும் இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக:

ஆழ்கடலுக்கு மீன்கள் சென்றுவிட்டதால், மீன்பிடிப் பணிகள் பெருமளவு குறைந்துள்ளன. ஏறாவூர், சவுக்கடி மற்றும் புன்னைக்குடா போன்ற முக்கிய மீன்பிடி இடங்களில் மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டதாக மீனவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்றினால் பயிர்கள் சேதமடைவதுடன், மரங்களின் இலைகள் மற்றும் கிளைகளும் முறிந்து விழுகின்றன.

கட்டுமானப் பணிகள் மற்றும் திறந்த வெளிகளில் பணியாற்றுவோர், கடும் வெயிலின் தாக்கத்தினால் தங்களது வேலைகளைச் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.

நாட்டின் தென்மேற்கு மலைப்பகுதிகளில் மழையைப் பொழிந்துவிட்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைக் கடந்து செல்லும் இந்தக் காற்று, ஈரப்பதத்தை இழந்து வறண்ட காற்றாக அதிவேகத்துடன் வீசுகிறது.

இதையே உள்ளூர் மக்கள் "கச்சான்" என்று அழைக்கின்றனர். அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்துப்படி, இந்தக் காலநிலை செப்டம்பர் மாதம் வரை நீடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

கடும் வெப்பம் மற்றும் புழுதிக்காற்றால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியிருக்கும் நிலையில், பொதுமக்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்