பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் நலன்கள…

பதில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடைச் சிறைச்சாலை அத்தியட்சகர் ஆகியோருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் பின்னர் ஏனைய சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கைதிகளின் நலன்கள் மற்றும் அவர்கள் துன்புறுத்தல்களுக்குள்ளானமை தொடர்பில் ஆராயும் நடவடிக்கையொன்றை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு அங்கமாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் கடந்த 07ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உட்பிரவேசிக்க முயன்றபோது அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அழைப்பாணை ஜூலை 7ஆம் திகதி இரவு சுமார் 8.30 மணியளவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னறிவிப்பின்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணத்தின்போது, ​​தனது அதிகாரிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் ஆணைக்குழு தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. இது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச் சட்டத்தை மீறுவதாகும் என்றும், சித்திரவதைக் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் தனது அதிகாரத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

மறுநாள் சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டபோதிலும், இந்தத் தாமதம் உரிய நேரத்தில் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பை பறித்துவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிடுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையொன்றுக்காக (பதில்)சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர் ஆகியோர் ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.