பாறுக் ஷிஹான் இலங்கைக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்களை, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் அருகே கியூ (Q) பிரிவுப் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

பாறுக் ஷிஹான்

இலங்கைக்குக் கடல் வழியாகச் சட்டவிரோதமாகக் கடத்த முயன்ற 120 பந்தயப் புறாக்களை, ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் அருகே கியூ (Q) பிரிவுப் பொலிஸார் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகள் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால், மண்டபம், மரைக்காயர் பட்டினம், வேதாளை, பாம்பன், குந்துகால் மற்றும் தனுஷ்கோடி போன்ற பகுதிகளில் இருந்து மஞ்சள், கடல் அட்டை, கஞ்சா, மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இலங்கைக்குக் கடத்தப்படுவதும், இலங்கையிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகள் தமிழகத்திற்குப் புழக்கத்திற்கு வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றைத் தடுக்கக் கடற்படை, கடலோர காவல் படை மற்றும் கியூ பிரிவு உள்ளிட்ட பல அமைப்புகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், பாம்பன் வடக்கு மீன்பிடித் துறைமுகம் வழியாக நாட்டுப் படகின் மூலம் இலங்கைக்குப் பந்தயப் புறாக்கள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் கியூ பிரிவு ஆய்வாளர் ஜீவமணிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு முதல் கியூ பிரிவு பொலிஸார் பாம்பன் பாலம் மற்றும் மீன்பிடித் துறைமுகப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

பாம்பன் சாலைப் பாலத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் செவ்வாய்க்கிழமை (07) அன்று சுற்றி வளைத்தனர். காரில் இருந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இதனையடுத்து காரைப் பரிசோதித்தபோது, அதற்குள் ஆறு இரும்பு கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 120 பந்தயப் புறாக்களைக் கண்டு பொலிஸார் அதிர்ச்சியடைந்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரை சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நவாப் செரிப் (22) மற்றும் மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த குமரேசன் (39) என்பது தெரியவந்தது. புறாக்களைக் கடத்திக் கொண்டு வந்த காரையும், கூண்டுகளையும் பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

புறாக்களுடன் காரைப் பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, கடலோரப் பகுதியில் ஆய்வு செய்யச் சென்ற கியூ பிரிவு பொலிஸாரைக் கண்டதும், அங்கு நின்றிருந்த நாட்டுப் படகு ஒன்று வேகமாக நடுக்கடலுக்குள் தப்பிச் சென்றது. அந்தப் படகு குறித்து மரைன் போலீசாரின் உதவியுடன் விசாரணை நடைபெற்று வருகிறது.

பிடிபட்ட இருவரும், மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புறாக்களைக் கடல் வழியாக இலங்கைக்குக் கடத்த முயன்றதை ஒப்புக்கொண்டனர். இலங்கைக்குப் பந்தயப் புறாக்கள் கடத்த முயன்றது இப்பகுதியில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.