வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை மலை–குமண தேசிய பூங்காவூடான காட்டுப்பாதை இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின்…
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை மலை–குமண தேசிய பூங்காவூடான காட்டுப்பாதை இன்று காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, ‘அரோகரா’ முழக்கத்துடன் காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
இந்த காட்டுப்பாதை எதிர்வரும் 24ஆம் திகதி மாலை 3.00 மணி வரை பக்தர்களின் பயணத்திற்காக திறந்திருக்குமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு பாதயாத்திரையில் முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டுள்ளனர். சுமார் 80 கிலோமீட்டர் தூரம் கொண்ட அடர்ந்த காடு, சேறு, மேடு மற்றும் ஒற்றையடிப் பாதைகளை கடந்து பக்தர்கள் கதிர்காமத்தை நோக்கி தமது புனிதப் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவம் எதிர்வரும் 15ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
15 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம், எதிர்வரும் 30ஆம் திகதி மாணிக்க கங்கையில் நடைபெறும் பாரம்பரிய நீர்வெட்டு (தீர்த்தோற்சவம்) நிகழ்வுடன் நிறைவடையவுள்ளது.

