கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் தொண்டர்கள் நேற்று (நேற்று) தமது பயணத்த…
கதிர்காமத்திற்கு பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி மட்டக்களப்பு மாநகர சபையின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் முன்னெடுக்கப்படவுள்ள அன்னதான நிகழ்வுப் பணிகளை ஆரம்பிக்கும் வகையில் மாநகர சபையின் தொண்டர்கள் நேற்று (நேற்று) தமது பயணத்தினை ஆரம்பித்தனர்.
வரலாற்று புகழ்மிக்க கதிர்காமத்திற்கு, வனப் பாதை வழியாக பாத யாத்திரை செல்கின்ற பக்தர்களின் நன்மை கருதி “கதிர்காம பாதயாத்திரைக்கான மட்டக்களப்பு மாநகர சபையின் அன்னதான மகாசபை” யின் ஒழுங்கமைப்பில் வர்த்தகர்கள் மற்றும் கொடைவள்ளல்களின் நிதி அணுசரணையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் கதிர்காம வனப் பாதையில் அமைந்துள்ள நாவலடி பிரதேசத்தில் அன்னதான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி, இவ்வருடமும் ஜுலை 10ஆம் திகதி முதல் ஜூலை 26 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பாத யாத்திரிகர்களுக்கான அன்னதான திருப்பணிகளை மேற்படி அன்னதான மகா சபையினர் முன்னெடுக்கவுள்ளனர்.
அத்துடன் யாத்திரிகர்களுக்கான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் குமுக்கன் ஆற்றுக்கு அப்பால் குடிநீர் விநியோக பணியினையும் இக்குழுவினர் தொடரவுள்ளனர்.
இவர்களை வழியனுப்பும் வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாநகரசபை பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
அதனை தொடர்ந்து ஆலய குருக்களினால் மாநகரசபை ஊழியர்களிடம் வேல் கையளிக்கப்பட்ட நிலையில் விசேட பூஜையினை தொடர்ந்து பணிக்குழுவினர் பயணித்தினை ஆரம்பித்தனர்.
மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் ஆணையாளர் என்.தனஞ்ஜெயன், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்கள், மாநகரசபை உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் இதன்போது கலந்துகொண்டனர்.

