டி.கே.பி.கபில கட்டுநாயக்க, 18ஆம் மைல் கல் சந்திக்கு அருகாமையில், நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதாகக் கூறி சிமெண்ட் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று காலை மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதிகா…

டி.கே.பி.கபில

கட்டுநாயக்க, 18ஆம் மைல் கல் சந்திக்கு அருகாமையில், நட்சத்திர ஹோட்டல் ஒன்றை அமைப்பதாகக் கூறி சிமெண்ட் உற்பத்தி மற்றும் பொதியிடல் தொழிற்சாலையை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை (19) அன்று காலை மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

அதிகாரிகளின் அனுமதி முறைகேடு:

மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இந்த இடத்தில் நட்சத்திர ஹோட்டல் கட்டுவதற்கான கட்டிட வரைபடம் கடந்த 2020.12.10 அன்று, அங்கீகரிக்கப்பட்டது. தொடர்ந்து, நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இதற்கான அபிவிருத்தி அனுமதிப்பத்திரம் 2025.12.25 அன்று வழங்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 6 ஏக்கர் 1 ரூட் நிலப்பரப்பில், 3,857 சதுர மீட்டர் பரப்பளவிலான ஒற்றை மாடி ஹோட்டல் கட்டிடத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு, பின்னர் அதனை 12,925 சதுர மீட்டர் பரப்பளவிலான ஐந்து மாடி சிமெண்ட் தொழிற்சாலையாக மாற்றி அனுமதி பெற்றுள்ளதாகப் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதிக்கப்படவுள்ள பகுதிகள்: இந்தக் கட்டுமானப் பணிகள் கொழும்பு - கட்டுநாயக்க பிரதான வீதியிலிருந்து நீர்க்குமிழி (களப்பு) வரை நீண்டுள்ளது. இதனால் பின்வரும் தரப்பினர் மற்றும் பகுதிகள் நேரடியாகப் பாதிப்புக்குள்ளாவார்கள் என எச்சரிக்கப்படுகிறது:

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம். பிரதேசத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் மூன்று சர்வதேச பாடசாலைகள். மீகமுவ களப்பு மற்றும் அதனை நம்பி வாழும் மீனவ சமூகம், லியனகெமுல்ல கடலோர சதுப்புநிலக் காடுகள். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் விடுதிகள் மற்றும் முத்துராஜவெல படகுச் சுற்றுலாத் துறையினர்.

விமான என்ஜின்களுக்கு ஆபத்து: விமான ஓடுபாதைக்கு மிக அருகாமையில் இந்தச் சிமெண்ட் ஆலை அமைவதால், அதிலிருந்து வெளியேறும் ‘சிமெண்ட் தூசு’ (Cement Dust) விமானங்களின் என்ஜின்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கட்டுநாயக்க விமான நிலைய என்ஜின்கள் எச்சரித்துள்ளனர்.

எதிர்ப்புக் குரல்கள்: சிமெண்ட் தூசு நிறைந்த சூழல், மக்கள் வாழும் பகுதிக்கும் சுற்றுலாத் துறைக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் எனப் பொதுமக்கள் சுட்டிக்காட்டினர். இன்று நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் பௌத்த மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்கள், மீனவர்கள், சூழலியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிரேஷ்ட பிரஜைகள், சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பெற்றோர் எனப் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.