கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட சின்னத் தோட்டப் பகுதியில் உள்ள இந்து மயானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கிண்ணியா நகர சபையினால் சின்னத் தோட்டப் பகுதியில் கழிவு முகாமைத்துவ…

கிண்ணியா நகர சபை எல்லைக்குட்பட்ட சின்னத் தோட்டப் பகுதியில் உள்ள இந்து மயானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கக் கோரி, அப்பகுதி மக்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கிண்ணியா நகர சபையினால் சின்னத் தோட்டப் பகுதியில் கழிவு முகாமைத்துவத் தளம் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படுவதால் அருகிலுள்ள இந்து மயானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குப்பைகளால் ஏற்படும் துர்நாற்றம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கழிவுகளால் கவரப்படும் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இறுதிச் சடங்குகளை முறையாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்ற கிண்ணியா நகர சபை தவிசாளர் எம். எம். மஹ்தி, பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

மயானப் பகுதியில் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்துதல், சேதமடைந்த மதில்களை புனரமைத்தல் மற்றும் அந்தப் பகுதியை முழுமையாக மயானப் பயன்பாட்டிற்காக ஒதுக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

எந்தவொரு மதத்தினரின் வழிபாடுகள் மற்றும் இறுதிச் சடங்குகளுக்கும் இடையூறு ஏற்பட அனுமதிக்கப்படமாட்டாது என தவிசாளர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

எனினும், நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.