ஹொரண - மொரகஹஹேன வீதியின் கானன்வில வளைவுப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்தத் துயரச் ச…

ஹொரண - மொரகஹஹேன வீதியின் கானன்வில வளைவுப் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை (19) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக ஹொரண தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக ஹொரண மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பன்னிப்பிட்டி மற்றும் கிரிவத்துடுவ பிரதேசங்களைச் சேர்ந்த 25 மற்றும் 17 வயதுடைய தில்ஷான் மதுசர செனவிரத்ன மற்றும் உதீஷ் சித்மின என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் ஹொரணையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, ஹொரணையில் இருந்து அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள், கானன்வில வளைவில் திரும்பும்போது சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் மோதியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர்  ஹொரண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.