நுவரெலியா, லிந்துலை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமடைந்துள்ளார். வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்றை கொன்று இறைச்சிக்காக பயன்படுத்தியமை தொடர்பில் ஏற்பட்ட கோபமே இந்த தாக்குதலுக்கு காரணமாகியுள்ளதாக பொலிஸார் தெர…

நுவரெலியா, லிந்துலை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மகன் ஒருவர் தனது தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் தந்தை படுகாயமடைந்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்பட்ட கோழியொன்றை கொன்று இறைச்சிக்காக பயன்படுத்தியமை தொடர்பில் ஏற்பட்ட கோபமே இந்த தாக்குதலுக்கு காரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 65 வயதுடைய நபர், லிந்துலை மவுஸ்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் முதலில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோழி தொடர்பான பிரச்சினையைத் தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலின் பின்னர் சந்தேகநபரான மகன் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை லிந்துலை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.