கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்து விபத்து : உயிரிழந்த மாணவரின் தந்தை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள் 💬 Join கடந்த 2024-ஆம் ஆண்டு பதுளையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (K…

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்து விபத்து : உயிரிழந்த மாணவரின் தந்தை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு ஒத்திவைப்பு

வாட்சப் மூலம் Minnal24 செய்திகளை பெறுங்கள் உடனடியாக செய்திகள் பெற Join செய்யுங்கள்

💬 Join

கடந்த 2024-ஆம் ஆண்டு பதுளையில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) மாணவர்கள் பயணித்த பேருந்து விபத்தில் உயிரிழந்த மாணவர்களில் ஒருவரின் தந்தை தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவின் உண்மை நிலைகளை உறுதிப்படுத்தும் விசாரணையை, செப்டம்பர் 11ஆம் திகதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

குறித்த விபத்தில் தனது மகனும் மேலும் இரு மாணவர்களும் உயிரிழந்தமை அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதன் விளைவாகும் எனக் கூறி, அதற்கான இழப்பீட்டை வழங்குமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.

நீதியரசர்கள் அர்ஜுன ஒபேயசேகர, டாக்டர் சோபித ராஜகருண மற்றும் மேனக விஜேசுந்தர ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக செனட் உறுப்பினர்கள் மற்றும் விபத்தில் தொடர்புடைய பேருந்து சாரதி ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பேருந்து சாரதி, ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மனுதாரரின் மகன் அளவையியல் (Quantity Surveying) பட்டப்படிப்பில் கல்வி கற்று வந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதுளைக்கு மேற்கொள்ளப்பட்ட களப்பயணத்தில் பங்கேற்றிருந்தார். அம்பகஹ சந்திப் பகுதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூன்று மாணவர்கள் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

விசாரணைகளில், 1992-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு 2020-ஆம் ஆண்டு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட அந்த பேருந்தின் பிரேக் அமைப்பு முறையாக பராமரிக்கப்படாதிருந்தது தெரியவந்துள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக சாரதியால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே விபத்திற்குக் காரணமாக அமைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நேரத்தில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட 41 பேர் பேருந்தில் பயணித்திருந்தனர்.

பிரதிவாதிகளின் அலட்சியமே விபத்திற்குக் காரணம் என மனுதாரர் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், இது அடிப்படை உரிமை மீறலாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், உரிய இழப்பீட்டை வழங்குமாறும் உச்சநீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.