கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்க…
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் தேடிப்பார்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் மேயர் ராேசி சேனாநாயக்க வெள்ளிக்கிழமை வாக்குமூலம் வழங்கியிருந்தார். ஆணைக்குழுவின் செயலாளரால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலுக்கு அமையவே அவர் சமூகமளித்திருந்தார்.வர்த்தமானி அறிவித்தல்
2022 ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியின் போது, கொழும்பில் உள்ள குறைந்த வருமானம் பெறும் மற்றும் தேவையுடைய மக்களுக்கு சதொச மூலம் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்ட வவுச்சர்களை விநியோகித்ததில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்ளவே இவ்வாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
விசாரணை முடிவடைந்த பின்னர் அவர் வெளியில் வந்து இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடியின் போது, நாங்கள் சதொச மூலம் ஏழை மக்களுக்கு உணவு வவுச்சர்களை வழங்கினோம்.அந்த வேலைத்திட்டம் குறித்து அவர்களுக்கு இருந்த கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காகவே என்னை அழைத்திருந்தனர் என்றார்.
கொழும்பு மாநகர சபையில் கடந்த 15 வருட காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி செயற்பாடுகளால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கும் வருமானத்திற்கும் ஏற்பட்ட பாரிய நஷ்டங்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் பிரகாரம், 2025 டிசம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இது ஸ்தாபிக்கப்பட்டது. கொழும்பு 3. காலி வீதியில் அமைந்துள்ள இந்த ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ சேவைக்காலம் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்த போதும் விசாரணை நடவடிக்கைகளை மேலும் விரிவாக்குவதற்காக அதன் சேவைக்காலத்தை இந்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதி நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

