கதிர்காமம் புனித பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்களை, மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று உணவு சமைத்து வழங்கிய சம்பவம், இந்து மக்களையும் அவர்களின் மத உணர்வுகளையும் அவமதிக்கும் மிக மோசமான செயல் என…

கதிர்காமம் புனித பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்கான அன்னதான உணவுப் பொருட்களை, மட்டக்களப்பு மாநகர சபையின் குப்பை அகற்றும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் எடுத்துச் சென்று உணவு சமைத்து வழங்கிய சம்பவம், இந்து மக்களையும் அவர்களின் மத உணர்வுகளையும் அவமதிக்கும் மிக மோசமான செயல் என ஈ.பி.டி.பி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பாலைமீன்மடுவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை(15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், மாநகர சபையின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தார்.புனித யாத்திரை கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக உணவுப் பொருட்கள் மற்றும் சமையல் பாத்திரங்கள், வழக்கமாக குப்பை மற்றும் திண்மக் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தின் பெட்டியில் ஏற்றிச் செல்லப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்த நடவடிக்கை, புனித யாத்திரையில் ஈடுபடும் இந்து பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் செயலாக இருப்பதாகவும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பொதுமக்களுக்கும் உணவகங்களுக்கும் அறிவுறுத்தும் அதிகாரிகளே இவ்வாறு செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.தமிழரசுக் கட்சி மாநகர சபை இதனுடன், மட்டக்களப்பு மாநகர சபையின் தற்போதைய நிர்வாகம் தொடர்பாகவும் அவர் விமர்சனம் முன்வைத்தார்.தமிழரசுக் கட்சி மாநகர சபையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று ஓராண்டுக்கும் மேலாகியுள்ள நிலையில், நகரின் காந்தி பூங்கா, கந்தையா பூங்கா உள்ளிட்ட பல பொதுமக்கள் பயன்பாட்டு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாகவும், வடிகால்கள் மற்றும் வீதிகளில் திண்மக் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தார்.

மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மாநகர சபை, நகரின் சுகாதார மற்றும் கழிவு முகாமைத்துவப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றத் தவறியுள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், நகரை திறம்பட நிர்வகிக்க இயலாத நிலை இருந்தால் பொறுப்பிலிருந்து விலகி திறமையானவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.