விலங்குகள் மீதான வன்முறை என்பது மனித மனதின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கோரமான செயலாகும். அந்த வகையில், சீனாவில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜியேயாங் நகரில், கடந்த ஜூன் 28-ஆம் திகதி இந்த அரக…
விலங்குகள் மீதான வன்முறை என்பது மனித மனதின் இருண்ட பக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கோரமான செயலாகும். அந்த வகையில், சீனாவில் அண்மையில் நிகழ்ந்த ஒரு சம்பவம், ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜியேயாங் நகரில், கடந்த ஜூன் 28-ஆம் திகதி இந்த அரக்கத்தனம் அரங்கேறியுள்ளது.
ஜியேயாங் நகரின் புதிய தெருவில், 14 வயதிற்குட்பட்ட நான்கு சிறுவர்கள் ஒரு தாய் நாயைச் சிறைபிடித்தனர். கம்பிகளால் நாயைக் கட்டி இழுத்துச் சென்று சித்திரவதை செய்த அந்தச் சிறுவர்கள், அதன் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளனர். வலியால் துடித்துப் பரிதாபமாக அந்த நாய் உயிரிழந்தபோது, அதைப் பார்த்து ரசித்த சிறுவர்கள், "நல்ல வாசனை" என்று சிரித்தபடி, இந்த இக்கொடூரத்தை வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர். அதுமட்டுமின்றி, பிறந்த சில நாட்களே ஆன அந்தத் தாய் நாயின் மூன்று குட்டிகளையும் குச்சிகளால் குத்திக் கொன்று, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர்.
இந்தக் காணொளி இணையத்தில் வைரலாகப் பரவ, விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் கடும் கோபமடைந்தனர். இணையம் முழுவதும் சிறுவர்களின் செயலுக்குக் கண்டனங்கள் குவிந்தன. இந்தத் தகவலைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கோரினர். "எங்கள் குழந்தைகளின் இந்த இழிசெயல் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் அளிக்கிறது. இனி வரும் காலங்களில் அவர்களை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்போம்" என்று அவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் 14 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால், சீனச் சட்டத்தின்படி அவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடர முடியாது என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், அந்த நான்கு சிறுவர்களும் தற்போது 'நடத்தை சீர்திருத்தப் பள்ளிகளுக்கு' (Special Education School) அனுப்பப்பட்டுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயலுக்கு முழுப் பொறுப்பேற்று, அவர்களைக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் மீதான வன்முறையைத் தவிர்க்கும் நோக்கில், "இந்தச் சம்பவத்தின் காணொளிகளைப் பகிர்வதையும், சிறுவர்களை ஆன்லைனில் வன்முறைக்கு ஆளாக்குவதையும் பொதுமக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என சீன அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வன்முறை என்பது எவ்வடிவில் இருந்தாலும் அது கண்டிக்கத்தக்கதே என்பதை இச்சம்பவம் மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

