நிதர்ஷன் வினோத் வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஈழத்தின் மூத்த போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் காவல்துறையினரால் கைது ச…
நிதர்ஷன் வினோத்
வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட ஈழத்தின் மூத்த போராளிகளான குட்டிமணி மற்றும் தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா ஏற்பாட்டாளர்களுள் ஒருவரும், வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உபதவிசாளருமான கந்தசாமி சதீஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் அதன் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலைகள் எதிர்வரும் 25ஆம் திகதி வல்வெட்டத்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த ஏற்பாட்டுக்குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட கந்தசாமி சதீஸ், பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாகக் குற்றஞ்சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அவரைப் பிணையில் பொறுப்பேற்பதற்காகத் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கிய பிரமுகர்கள் எவரும் நீதிமன்றத்திற்கு வருகை தராத நிலையில், அவரது மைத்துனரின் உதவியோடு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்றுப் பின்னணி: 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை வன்முறைகளின் உச்சகட்டமாக, வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளாலும் சிறைச்சாலை அதிகாரிகளாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தமிழின வரலாறுகளின் மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாகும்.

