எஸ்.எஸ்.சி. (SSC) மைதானத்தில் தம்புள்ள சிக்ஸர்ஸ் (Dambulla Sixers) மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (19) அன்று பிற்பகல் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி, வெறும் கிரிக்கெட் போட்டியாக மாத்திரம் இருக்கப்போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை…

எஸ்.எஸ்.சி. (SSC) மைதானத்தில் தம்புள்ள சிக்ஸர்ஸ் (Dambulla Sixers) மற்றும் யாழ்ப்பாண கிங்ஸ் (Jaffna Kings) அணிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை (19) அன்று பிற்பகல்  நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டி, வெறும் கிரிக்கெட் போட்டியாக மாத்திரம் இருக்கப்போவதில்லை. ஞாயிற்றுக்கிழமை (19) அன்று மைதானத்தில் பதிவாகும் ஒவ்வொரு ஓட்டமும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு விக்கெட்டும் ஓர் உயிர்காக்கும் செய்தியை உலகிற்குப் பறைசாற்றப்போகின்றன.

மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கான இலங்கையின் முதன்மைத் திட்டமான ‘எல்.பி.எல். பிங்க் மேட்ச்’ (LPL Pink Match), நாட்டின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வுகளில் ஒன்றை கல்வி, நம்பிக்கை மற்றும் ஆரம்பகாலக் கண்டறிதல் ஆகியவற்றுக்கான தேசிய தளமாக மாற்றியுள்ளது. அவுஸ்திரேலியாவின் ‘பிங்க் டெஸ்ட்’ (Pink Test) மற்றும் பாகிஸ்தானின் ‘பிங்க் டே’ (Pink Day) ஆகிய உலகப்புகழ் பெற்ற முன்னெடுப்புகளைப் போல, இலங்கையும் கிரிக்கெட் விளையாட்டின் ஊடாக இந்த முக்கிய செய்தியைப் பரப்புகிறது.

டி.எல்.சி. (TLC) – தொடு, கவனி, பரிசோதி

ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு தந்தையும், கணவனும், மகனும், சகோதரனும், நண்பனும் பின்வரும் மூன்று எளிய செயல்களைப் பின்பற்ற வேண்டும்:

தொடு (Touch): உங்கள் மார்பகங்களைப் பரிசோதியுங்கள். ஏதேனும் கட்டிகள், தடிப்பு அல்லது அசாதாரண மாற்றங்கள் உள்ளனவா என்று உணருங்கள்.

கவனி (Look): கண்ணாடியின் முன்னால் நின்று, மார்பகத்தின் வடிவம், அளவு மற்றும் தோலில் அல்லது காம்புகளில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளனவா என்று உற்றுநோக்குங்கள்.

பரிசோதி (Check): ஏதேனும் அசாதாரண மாற்றங்களைக் கண்டால், தயங்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.

இதைச் செய்வதற்குச் சில நிமிடங்களே தேவைப்படும். ஆனால், அந்தச் சில நிமிடங்கள் உங்கள் உயிரையோ அல்லது உங்களுக்கு அன்பானவர்களின் உயிரையோ காப்பாற்றக்கூடும்.

இலங்கையில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. தினமும் சுமார் 15 பெண்களுக்கு இந்நோய் கண்டறியப்படுவதுடன், மூன்று பெண்கள் உயிரிழக்கின்றனர். எனினும், ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் இதைக் குணப்படுத்த முடியும்.

இந்த விழிப்புணர்வுப் பயணத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக தம்புள்ள சிக்ஸர்ஸ் அணி முன்னிலை வகிக்கிறது. போட்டித் தன்மையைத் தாண்டி, புற்றுநோய் விழிப்புணர்வுக்காக யாழ்ப்பாண கிங்ஸ் அணியும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளது. மைதானம் முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். வீரர்கள் ரகசியமாகத் தயாரிக்கப்பட்ட இளஞ்சிவப்பு நிற ஆடைகளையும், தலைக்கவசங்களையும் அணிவார்கள். தொலைக்காட்சிகளிலும் மைதானத் திரைகளிலும் டி.எல்.சி. (TLC) இலச்சினை ஒளிபரப்பப்படும்.

‘ குணமடையும் இடம்’ மற்றும் எஸ்.ஓ.எஸ். (SOS) சிறுவர் கிராமங்களின் சிறார்கள் வீரர்கள் மத்தியில் இன்றைய தொடக்க நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். புற்றுநோய் என்பது ஒரு நோயாளிக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இது உணர்த்தும்.

போட்டிக்கு வரும் ரசிகர்கள் ‘பிங்க்’ டீ-ஷேர்டுகளைக் கொள்வனவு செய்வதன் மூலம் இந்திரா புற்றுநோய் அறக்கட்டளைக்கு (Indira Cancer Trust) ஆதரவளிக்கலாம். இந்த நிதி, புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டங்கள், கீமோதெரபி சிகிச்சை பெறுவோருக்கான விக் தயாரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும்.

சுகாதார அமைச்சு, தேசிய புற்றுநோய் தடுப்புத் திட்டம், அபேக்‌ஷா மருத்துவமனை மற்றும் புற்றுநோய் நிபுணர்கள் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால்:

“ஞாயிற்றுக்கிழமை (19) அன்று நாம் இளஞ்சிவப்பு நிறத்தை அணிகிறோம்; இது வெறும் விளையாட்டுக்காக அல்ல, உயிர்களுக்காக. மார்பகப் புற்றுநோயுடன் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்காகவும், அவர்களைக் கைவிடாத குடும்பங்களுக்காகவும், ஆரம்பகாலக் கண்டறிதலால் உயிர் பிழைக்கக்கூடிய ஒவ்வோர் உயிர்க்காகவும் நாம் இதைச் செய்கிறோம். மைதானத்தில் பதிவாகும் ஓட்டங்களை விட, டி.எல்.சி. செய்தியை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே எமது விருப்பம்.”

தம்புள்ள சிக்ஸர்ஸ் அணியின் ஆலோசகர் ரோஷான் மகாநாம:

“கிரிக்கெட்டுக்கு மக்களை ஒன்றிணைக்கும் சக்தி உண்டு. அந்தச் சக்தியை இன்று நாம் உயிர் காக்கும் செய்திக்காகப் பயன்படுத்துகிறோம். இன்றைய போட்டியில், ஒரு பெண்ணாவது பரிசோதனைக்குச் சென்றாலோ அல்லது ஒரு குடும்பமாவது இது குறித்துப் பேசத் தொடங்கினாலோ, அதுவே இந்த வெற்றியைக் காட்டிலும் மிகப்பெரிய சாதனையாகும்.”

ஞாயிற்றுக்கிழமை (19) அன்று போட்டி முடிவில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படலாம். ஆனால், ஒவ்வொரு இலங்கையரும் இந்த மூன்று சொற்களை நினைவில் கொண்டால், இன்று வெற்றியடைவது புற்றுநோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போராட்டமாகும்.