ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் 'ஆபிரிக்கா கார்ப்ஸ்' அமைப்பின் கூட்டு வாகன அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் குறைந்தது 50 மாலி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மாலி…
ஆபிரிக்க நாடான மாலியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அனெஃபிஸ் நகருக்கு அருகே, மாலி நாட்டு இராணுவம் மற்றும் ரஷ்யாவின் 'ஆபிரிக்கா கார்ப்ஸ்' அமைப்பின் கூட்டு வாகன அணிவகுப்பை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் குறைந்தது 50 மாலி நாட்டு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாலி நாட்டின் வடக்குப் பகுதியைத் தனி நாடாகக் கோரிப் போராடி வரும் துவாரெக் பிரிவினைவாதிகள் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஆயுதமேந்திய குழுக்கள் இந்த தாக்குதலுக்கு கூட்டாகப் பொறுப்பேற்றுள்ளன.மாலி இராணுவ வீரர்கள் மாலி இராணுவ வீரர்களும், அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ரஷ்யாவின் ஆபிரிக்கா கார்ப்ஸ் பாதுகாப்புப் படையினரும் அனெஃபிஸ் பகுதி வழியாக வாகனங்களில் சென்று கொண்டிருந்த போது, அங்கு மறைந்திருந்த ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகளாலும் வெடிகுண்டுகளாலும் தாக்குதல் நடத்தினர். எதிர்பாராத இந்த தாக்குதலில் இராணுவ வாகனங்கள் நிலை குலைந்தன.
சம்பவ இடத்திலிருந்து வெளியாகியுள்ள அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளில், இராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து கிடப்பதும், ஏராளமான இராணுவ வாகனங்கள் முற்றிலுமாக எரிக்கப்பட்டு அழிந்து போயிருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும், சில மாலி நாட்டு வீரர்களைப் பயங்கரவாதிகள் உயிருடன் சிறைபிடித்துச் சென்றுள்ளதும் அந்த வீடியோக்களில் பதிவாகியுள்ளது. பெரும் பின்னடைவு
மாலி நாட்டின் வடக்குப் பகுதியில் தன்னாட்சி கோரி வரும் துவாரெக் இனப் பிரிவினைவாதிகளுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருகிறது.
அதே நேரத்தில் அல்-கொய்தா மற்றும் ஐஎஸ் போன்ற சர்வதேச பயங்கரவாத அமைப்புகளும் இந்த பிராந்தியத்தில் தங்களது ஆதிக்கத்தைச் செலுத்த முயன்று வருகின்றன.
அரசுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் அங்கு களம் இறக்கப்பட்ட போதிலும், சமீபகாலமாகப் பயங்கரவாதிகள் இராணுவத்தினரைக் குறிவைத்து நடத்தும் கொரில்லா ரகத் தாக்குதல்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.
தற்போது நடந்துள்ள இந்த கொடூரத் தாக்குதல் மாலி இராணுவத்திற்கும், அங்குள்ள ரஷ்யப் படைகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

