ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து அழுத்துவதும், அவரது கீழாடையைக் கழற்ற முயல்வதும் ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகாது எனப் பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு, பெண் ஒருவர்…

ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து அழுத்துவதும், அவரது கீழாடையைக் கழற்ற முயல்வதும் ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகாது எனப் பாட்னா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ஆம் ஆண்டு, பெண் ஒருவர் தனது தந்தையுடன் புகைப்படம் எடுப்பதற்காக ஸ்டூடியோ ஒன்றிற்குச் சென்றுள்ளார். புகைப்படம் எடுத்த பிறகு, கணினியில் அதைப் பார்ப்பதற்காகத் தந்தையை வெளியே இருக்குமாறு புகைப்படக் கலைஞர் ஹிமான்ஷு குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தை வெளியே நின்றிருந்த நேரத்தில், அறைக்கதவை மூடிய ஹிமான்ஷு, அந்தப் பெண்ணின் ஆடைகளைக் கலைந்து, கீழாடையைக் கழற்ற முயன்றுள்ளார். மேலும், அப்பெண்ணின் மார்பகங்களை அழுத்தி அத்துமீறியுள்ளார். பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தந்தையும் அக்கம் பக்கத்தாரும் ஓடிவர, ஹிமான்ஷு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இவ்வழக்கில் ஹிமான்ஷு குமாரைக் குற்றவாளி என உறுதிப்படுத்திய விசாரணை நீதிமன்றம், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்தத் தண்டனையை எதிர்த்து ஹிமான்ஷு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி பூர்ணேந்து சிங், அவரை விடுவித்து உத்தரவிட்டார்.

இந்தத் தீர்ப்பிற்குக் காரணமாக நீதிபதி குறிப்பிடுகையில், “பெண்ணின் உடலுக்குள் பாலியல் ரீதியான ஊடுருவல் நடந்ததற்கான தெளிவான மருத்துவ ஆதாரங்கள் இல்லை. ஒரு செயலைக் ‘கற்பழிப்பு முயற்சி’ எனக் கருதுவதற்கு, அது தயாரிப்பு நிலையைத் தாண்டி, குற்றத்தைப் பூர்த்தி செய்யும் இறுதி நிலைக்குச் சென்றதற்கான உறுதியான சான்றுகள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்டவரின் செயல்கள் கண்டிக்கத்தக்கவை மற்றும் ஒரு பெண்ணின் கண்ணியத்தைக் குலைப்பவை என்பதை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354-இன் கீழ் வரும் ‘மானபங்கம்’ (Outraging the modesty of a woman) என்ற குற்றத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று விளக்கமளித்துள்ளது.

பாலியல் குற்றங்களில் ‘மானபங்கம்’ மற்றும் ‘கற்பழிப்பு முயற்சி’ ஆகியவற்றுக்கு இடையேயான சட்டபூர்வமான நுணுக்கங்களைக் குறிப்பிட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஏற்கனவே அனுபவித்த சிறைக்காலத்தைக் கணக்கில் கொண்டு, அவரை முதன்மைக் குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது. இத்தீர்ப்பு தற்போது சமூக வலைதளங்களிலும் சட்ட வல்லுநர்களிடையேயும் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.