மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினால், ஆறு முக்கிய துறைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(…
மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சமூகத்தினால், ஆறு முக்கிய துறைகளை உள்ளடக்கித் தயாரிக்கப்பட்ட வரவு - செலவுத் திட்ட முன்மொழிவு, ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் நேற்று(17.07.2026) இடம்பெற்றுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட திட்டம்
இந்த முறை வரவு - செலவுத் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் சமூகம் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில்,
"மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சாதாரண பங்காளிகளாக மாற்றுவது அவசியம். இதற்காக “ஒன்றாக பிடி தளராது” எனும் தேசிய கொள்கை வரைவு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவுத் திட்ட முன்மொழிவுகளும் அந்தத் தேசிய கொள்கைக்கேற்பவே அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
விசேட தீர்மானங்கள் இதன்போது, சுற்றுலாத்துறையில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் அவர்களுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துதல்.
அத்துடன், பாரம்பரியமான பயிற்சிகள் மூலமாக வேலைவாய்ப்பு சந்தையில் மாற்றுத்திறனாளிகளுக்குப் போதிய வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை என்பதால், நவீன தேவைக்கேற்ற பயிற்சிகளை முன்னெடுத்தல்.
மாற்றுத்திறனாளிகளை சமூகத்தின் சம பங்காளிகளாக மாற்ற அரசாங்கம் பல கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதியின் செயலாளர், இதற்கான சுற்றறிக்கைகள் மற்றும் பணிப்புரைகளை விரைவாக வெளியிடுவதுடன், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, நாடாளுமன்ற ஒன்றியத்தின் உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

