நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நி…
நாட்டின் கல்வி அமைப்பில் பன்முகத்தன்மையை அங்கீகரித்து, அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் ‘சரசவி திரியோ அபிமன்’ விசேட புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நிகழ்வின் போது, மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ரூ.100,000 பெறுமதியான புலமைப்பரிசில் நிதி வழங்கப்பட்டது.
தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், எந்தவொரு குழந்தையும் கல்வி முறையிலிருந்து விலகிச் செல்லாத வகையில், விசேட தேவையுடைய அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியைப் பெற சம வாய்ப்புகளை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என வலியுறுத்தினார்.
மேலும், பல்கலைக்கழக வளாகங்களில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்துவது, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாகிகளின் முக்கிய பொறுப்பாகும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார்.

